கற்றல் நன்றே
"கல்வி" இந்த சொல் என்னவென்றே தெரியாமல் நாடோடியாய் உலகின் பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்தனர்.., எழுதப்படிக்க தெரியாமல், மொழி இன்னது, மொழியின் வரையரை இன்னது, இந்த வார்த்தையின் அர்த்தம் இதான் என்று நாகரிகமற்று நாடோடியாய் இன்னும் சில மனிதர்கள் வாழ்ந்த காலங்களில்.., அரசன் தொடங்கி சாமானிய மக்கள் தொடங்கி அனைவரும் கல்வியின் மேன்மையை உணர்ந்து கல்வியறிவு பெற்றிருந்த ஒர் இனம் உண்டெனில்
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே, வாளோடுமுன் தோன்றி மூத்த குடி"யான நம் தமிழ்குடி ஒன்றே..
சாதாரண குடியானவன் கல்வியில் சிறந்து விளங்கியிருக்கும் பொழுது நாட்டை ஆளும் மன்னன் மட்டும் சிறப்பானா கல்வியறிவு பெற்று அதன் சிறப்புகளை உணராமல் இல்லை..
தமிழ் மன்னர்கள் தம்மை நாடி வந்த புலவர்களையும், பாணர்களையும் மட்டும் ஆதரித்து அவர்களின் படைப்புகளை மட்டும் ரசித்து கொண்டிருக்கவில்லை
அவர்களை போலவும், ஏன் அவர்களை விஞ்சும் அளவுக்கு கூட பாடல் இயேற்றும் திறன் பெற்றிருந்தனர்
சங்க இலக்கியமான புறநானூற்றில் தான் தமிழ் மன்னர்கள் பாடிய பாடல்கள் மிகுந்துள்ளன..
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் பதிமூன்று பேரின் பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன
இப்பாடல்களுக்கெல்லாம் மகுடம் வைத்தது போன்ற பாடல் எதுவென்றால் "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்" என்ற பாண்டிய மன்னன் கல்வியின் சிறப்பை பற்றிய பாடல் தான் இது புறநானூற்றில் 183 வது பாடலாய் உள்ளது அப்பாடலானது
"உற்றுழி உதவியும், உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது, கற்றல் நன்றே
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
சிறப்பின் பாலால், தாயும் மனம் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது, அவருள்
அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"
இப்பாடலில் பொதிந்துள்ள பொருளானது..
நமக்கு கல்வி கற்றுதரும் ஆசிரியருக்கு எவ்வித துன்பமும் நேராமல் காக்க வேண்டும், அளவில்லாத பொருள் கொடுத்தேனும் கல்வி கற்க வேண்டும், ஒரே வயிற்றில் பிறந்தவராயிருந்தாலும் தாயியும் கல்வியில் சிறந்த அறிவியல் சிறந்த மகன் இளையவாய் இருப்பினும் அவனுக்கே முக்கியத்துவம் கொடுப்பாள்,
கல்வியறிவில் சிறந்த ஒருவனின் அறிவுறுத்தலின் படியே அரசனும் செயல் படுவான், கல்வியில் சிறந்த ஒருவன் நான்கு பிரிவில் கீழ்நிலையில் இருப்பவனாய் இருந்தாலும், மேற் பிரிவை சார்ந்த ஒருவனும் அவனிடமே கல்வி கற்பான்
கல்வியின் சிறப்பை இந்த பாடலை விட வேறு எந்த நூலிலும் கூறப்படவில்லை இரத்தின சுருக்கமாய் பொருள் புதிந்த இந்த பாடலை பாடியவர் சிறந்த புலவர் மட்டுமல்ல சிறந்த மன்னன், வட நாட்டு ஆரிய மன்னன் ஒருவரை இவர் வென்ற காரணத்தினாலோ என்னவோ இவர் "ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் " என்று சிறப்பிக்கப்படுகின்றார்
சிலப்பதிகாரத்தில் கூறப்படும் பாண்டிய மன்னனும் இவரே..
இப்பாடலை மனதில் கொண்டே பிற்கால தென்காசிப்பாண்டியரான அதிவீரராம பாண்டியர் தன் வெற்றி வேற்கை எனும் நூலில்
"கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே"
என்ற பாடலை பாடியிருப்பார் போலும்
கல்வியின் சிறப்பை உணர்ந்து கற்போம் கற்ப்பிப்போம்
தகவல்கள் திரட்டியவை
எழுத்து
வெ.கண்ணன்
Comments
Post a Comment