அபராஜித்தனின் வேலஞ்சேரி செப்பேடு

வேலஞ்சேரி செப்பேடு தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான ஆவணம் , இச்செப்பேடு கிடைக்கும் வரை பல்லவ அரசர்களான கம்பவர்மன் , நிருபதுங்கவர்மன் , அபராஜித்தவர்மன் பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மனின் மகன்கள் தான் என்று அனைத்து வரலாற்று அறிஞர்களும் கருதினர் ஆனால் இந்த செப்பேடு தான் இந்த கருதுகோள்களை பொய்யாக்கியது

செப்பேட்டின் அமைப்பு

இந்த செப்பேடு இன்றைய திருவள்ளுர் மாவட்டத்திலுள்ள வேலஞ்சேரி எனுமிடத்தில் 1977 ம் ஆண்டு கண்டறியப்பட்டது , மொத்தம் ஐந்து ஏடுகளையும் , இந்த ஏடுகளை இணைக்கும் வளையத்தில் பல்லவர்களின் காளைச்சின்னமும் அதனை சுற்றி பல்லவ அரசன் அபராஜித்தன் மற்ற குல அரசர்களுக்கு விடுக்கும் ஆணை என்று பொறிக்கப்பட்டுள்ளது , வழக்கமான பிற்கால பல்லவர் செப்பேடுகளை போல் இந்த செப்பேடும் வட மொழி மற்றும் தமிழிலும் எழுதப்பட்டுள்ளது வடமொழிப் பகுதியை பெரிய காவியங்களை எழுக்கூடிய ஶ்ரீகுமரனின் மகன் மகாதேவனும் , பல்லவரின் அரசு சின்னத்தை விடேல் விடுகு பெருங்கண்ணனும் , தமிழ் பகுதியை பொதினி மகாதேவபட்டனும் இந்த செப்பேட்டை காஞ்சியில் பிறந்த சிற்பி விஜயன்னாவும் செதுக்கியுள்ளார் இவர்களின் இந்த பணிக்கு அவர்களுக்கு ஊதியமாய் அளிக்கப்பட்ட நிலத்தின் அளவையும் இந்த செப்பேடு குறிப்பிடுகின்றது

செப்பேட்டின் சிறப்பு:

இந்த செப்பேடு பல்லவர்களின் குல பெருமைகளை கூறிவிட்டு

கம்பவர்மன் பெரும் புகழுடன் பல்லவ வம்சத்தில் தோன்றினான் , தன் தம்பியான நிருபதுங்கவர்மனை வீழ்த்தி அவன் ஆட்சியை கைப்பற்றினான் , கம்பவர்மனுக்கும் , கங்கர் குலத்தை சேர்ந்த விஜாயாவிற்க்கும் பிறந்த மகன்தான் அபராஜித்தவர்மன் என்றும் , அபராஜித்தன் பாண அரசர்களின் யானைகளையும் , சிற்றாறூர் எனுமிடத்தில் சோழர் படையை யானைகளை கொண்டே தோற்கடித்தவன் போன்ற செய்திகள் காணப்படுகின்றன , இதில் முக்கியமானது கம்பவர்மனின் மகன் தான் அபராஜித்தன் என்பதும் அவன் சோழரை தோற்கடித்த செய்தியும் தான்

இத்தகவல் தான் நீண்ட நாட்களாய் நிலவிய பல்லவ மன்னர்களான

கம்பவர்மன் , நிருபதுங்கவர்மன் , அபராஜித்தவர்மன் ஆகிய மூவரின் உறவு முறையை விளக்கியது , மேலும் திருத்தணி முருகன் கோவில் பல்லவர் காலத்திலேயே சிறப்புற்று திகழ்ந்த செய்தியையும் இந்த செப்பேடு மூலம் அறிய இயலுகின்றது

செப்பேட்டின் தகவல்கள்

அபராஜித்தவர்மனின் ஒன்பதாம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட இந்த செப்பேடு , திருத்தணி நாட்டிலுள்ள குன்றவர்தன கோட்டத்தினை சேர்ந்த புதூர் எனும் கிராமத்தை தானமாக வாமனன் என்பவரின் வேண்டுகோளுக்கினங்க தங்க பாத்திரத்திலிருந்து நீரை வார்த்து அபராஜித்தவர்மன் தானமாக கொடுத்த நிகழ்வையும் , இந்த கிராமத்தை மேலிருஞ்செறு கிராமத்தின் கிராம சபையை சேர்ந்தோர் , தானமளிக்கபட்ட இந்த புதூரை தங்கள் கிராமத்துடன் இணைத்து ஆயிரம் கலம் / காடி அளவுள்ள நெல் சூரியன் , சந்திரன் உள்ளவரை திருத்தணி நாட்டில் மேன்மலை குன்றவர்வர்த்தன கோட்டதில் திருத்தணியில் மலைமீது விருப்பம் கொண்டு மகிழ்வுடன் இருக்கும் சுப்பிரமணியருக்கு வழங்க வேண்டும் என்றும் தானமளிக்கப்பட்ட புதூருக்கு அரசின் வரியிலிருந்து சில விலக்குகளும் கொடுக்கப்பட்டதை இந்த செப்பேடு கூறுகின்றது

தகவல்கள்: பல்லவர் செப்பேடுகள் மு.ராசேந்திரன்

Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

கற்றல் நன்றே

சோழபுரம்- தமிழகத்தின் முதல் பள்ளிப்படை