ராஜராஜேஸ்வரம் சிவபுரம் - ஒரகடம்

சிவபுரம் இந்த ஊர் காஞ்சிபுர மாவட்டம் ஒரகடம் அருகேயுள்ள ஒரு சிற்றூர் இந்த ஊர் முதலாம் இராசேந்திர சோழரின் 12 ம் ஆட்சி ஆண்டு வரை உரோகடம் என்றும் 13 ம் ஆட்சி ஆண்டு முதல் சிவபுரம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது

இவ்வூரில் உள்ள சிவாலயம்  முழுவதும் கருங்கற்களால் அமைந்த ஒரு தள விமான அமைப்பையும் கொண்டது இந்த சிவாலயம் சோழ மாமன்னர் முதலாம் இராசராசன் ( 985 -1014 ) ஆட்சியின் 24 வது ஆண்டில் ஏற்கனவே இருந்த கோவிலை புதுப்பித்தோ அல்லது புதியதாகவோ கட்டப்பட்டுள்ளது

    ராஜராஜேஸ்வரத்தின்      முகப்பு

கோவிலின் கருவறை , முகமண்டபம் , ஆளுயர தூவர பாலகர்கள் என இராச இராசரின் தனித்துவ கட்டிட பாணியை தாங்கி நிற்கின்றன விமானமும் இராச இராசன் தன் பாட்டன் அரிஞ்சிய சோழருக்கு எடுப்பித்த பள்ளிப்ழடையின் விமான அமைப்பை நினைவூட்டுகின்றது 

விமானத்தின் அமைப்பு

சோழர் கால எழில்மிகு கோட்ட சிற்பங்களும் , சண்டிகேஸ்வர் சிற்பங்களும் இக்கோவிலுக்கு இன்னும் அழகூட்டுகின்றன

தேவக்கோட்ட சிற்பங்கள் மற்றும் சண்டிகேஸ்வர் சிற்பம்
துவார பாலகர்கள்

கல்வெட்டு தகவல்கள்

கோவிலின் சுற்று சவர் முழுதும் கல்வெட்டுகள் நிரம்ப காணப்படுகின்றன முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் சடையவர்ம சுந்தபாண்டியன் , இராஜாதி ராஜன் என பல்வேறு மன்னர்களின்  கல்வெட்டுகள் உள்ளன ஆனால் தந்தையின் பெயரால் அமைந்த காரணத்தாலோ , தன் தந்தை கட்டிய கற்றளி என்ற காரணத்தாலோ இந்த கோவிலுக்கு மாமன்னர் முதலாம் இராசேந்திர சோழர் அதிக கொடைகளை வழங்கியுள்ளார் 

இராசராசரின் கல்வெட்டு புகைப்படம் : தம்பி பொன்கார்த்திகேயன்

இங்குள்ள கல்வெட்டுகளில்  பழமையானது முதலாம் இராசராச சோழரின் 24வது ஆட்சியாண்டு கல்வெட்டு அந்த கல்வெட்டில் இன்று ஒரகடம் என்று அழைக்கப்படும் இந்த சிவபுரம் கோவில் அமைந்துள்ள பகுதி உரோகடம் என்றும் இந்த பகுதி செயம் கொண்ட சோழ மண்டலத்தின் மணவிற் கோட்டத்தின் புரிசை நாட்டு பிரிவின் கீழ் வருவதாய் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கல்வெட்டில் இக்கோவில் இறைவன் இராஜராஜேஸ்வரமுடைய மகாதேவர் என்றும் அழைக்கபடுகின்றார் 

இந்த கோவிலுக்கு ஏற்கனவே தானம் கொடுத்த நிலத்திற்க்கு பதில் வேறு நிலம் தானமாய் அளித்தது பற்றி இந்த கல்வெட்டு கூறுகிறது

முதலாம் இராசேந்திர சோழரின் ஏழாவது ஆடசியாண்டில் இதே மண்டலம் இதே கோட்டத்தை சேர்ந்த கன்றூர் நாட்டில் உள்ள கூவம் எனப்படும் மதுராந்தக நல்லூர் உடன் சேந்த மதுராந்தக சேரியில் உள்ள ஏரிக்கு பாலாற்றிலிருந்து நீர் பாயும் வாய்க்கால் முலம் கிடைக்க கூடிய வருவாயை மதுராந்தக நல்லூரை சேர்ந்தவர்கள் தானமாய் கொடுத்தை கூறுகின்றது 

முதலாம் இராசேந்திர சோழரின் எட்டாவது ஆட்சியாண்டில் இராசேந்திர சோழரே இரண்டு நுந்தா விளக்கு எரிக்க 180 ஆடுகளை தானமாக கொடுத்துள்ளார்

மேலும் இதே ஆண்டில் இதே ஊரை சேரந்த 

நாரயணன் செல்வன் என்பவரின் மனைவி வாசவி ஒரு நுந்த விளக்கு எரிக்க கொடுத்த 96 ஆடுகளையும் பெற்றுக்கொண்ட சிவபண்டாரிகள் விளக்கெரிக்க நெய்யை தினமும் இக்கோவிலுக்கே கொண்டு வந்து தருவதாய் கூறி ஒப்புக்கொண்ட தகவல்களையும் கல்வெட்டுகள் கூறுகின்றன 

ஓன்பதாவது ஆடசியாண்டில் சிவபுரத்து இராஜராஜேஸ்வரத்து இறைவனுக்கு இராசேந்திர சோழரே அணிகலன்களை தானமளித்த செய்தியை கூறுகின்றது அந்த ஆபரணங்களின் பெயர் மற்றும் அதன் எடை அதில் பதிக்க பட்ட கற்களின் வகை போன்றவையும் விளக்கப்பட்டுள்ள அந்த கல்வெட்டில் ஆபரணங்களின் பெயர்களுக்கும் இராசேந்திர சோழரின் பெயரே சூட்டப்பட்டது போலும்

ஶ்ரீ ராஜேந்திர சோழன் மண்டை

ஶ்ரீ  ராஜேந்திர சோழன் பட்டம்

ஶ்ரீ  ராஜேந்திர சோழன் வெண்சாமரை 

போன்றவை இராசேந்திர சோழரால் தானமளிக்கப்பட்டதை தெரிவிக்கின்றது இந்த கல்வெட்டு

மேலும் இவரின் பதினாறாவது ஆட்சியாண்டில் இராஜராஜேஸ்வரமுடையார் கோவிலிருந்து நூறு கழஞ்சு பொன்னைப் பெற்று அதற்க்கு வட்டியாக 166 கலம் இரு தூணி நெல் கொடுப்பதாகவும் சம்மதிக்ப்பட்ட நிகழ்வையும் கல்வெட்டுகள் கூறுகின்றன

முதலாம் சடையவர்ம சுந்தபாண்டியரின்  பதினைந்தாவது ஆட்சியாண்டில் இக்கோவில் சந்தி விளக்கெரிக்க கூவத்தை சேர்ந்த வாசுதேவன் காரணை விழுப்பரையாரின் மகள் ஆறைச்சியார் ஒன்பது பணம் தானம் அளித்துள்ளார் 

இன்னும் பல்வேறு கல்வெட்டுகள் பல சுவையான தகவல்களை தாங்கிய வண்ணம் இந்த சிவபுரம்  இராஜராஜேஸ்வரத்தில் உள்ளன 

தகவல்கள் : தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி -4 , தமிழகத் தொல்லியல் துறையின் இணையம்

படங்கள் : தம்பி மு.விமல் 

Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

கற்றல் நன்றே

சோழபுரம்- தமிழகத்தின் முதல் பள்ளிப்படை