இடையார்பாக்கம் மகாதேவர் கோவில்

பல்லவர்களிடமிருந்து தொண்டை மண்டலத்தை( இன்றைய சென்னை, காஞ்சிபுரம்,திருவள்ளுர், மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் ஒருப்பகுதி )கைப்பற்றிய சோழர்கள்

பல்லவர்களை போன்றே தொண்டை மண்டலம் முழுவதும் கோவில்களையும் நீர்நிலைகளையும் ஏற்ப்படுத்தினர்

குறிப்பாக தொண்டை மண்டலத்தில் மட்டும் மிகுதியாக காணப்படும் யானையின் பின்புறத்தினை போன்ற அமைப்பை உடைய தூங்காணை மாடக்கோவில்களை எழுப்பினர்

அவ்வகை கோவில்களில் ஒன்று தான் பிற்கால சோழரான முதலாம் குலோத்துங்க சோழரால் எழுப்பப்பட்ட இடையாற்று பாக்கம் கோவில்



இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழரின் பதிமூன்றாவது ஆட்சி ஆண்டில் எடுப்பிக்கப்பட்டுள்ளது



அக்காலத்தில் இக்கோவில் இறைவன் "திருப்படக்காடுடைய மகாதேவர்"

என்று அழைக்கப்பட்டுள்ளார்

மேலேயுள்ள கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழரின் 13 ம் ஆட்சியாண்டில் ஆருர் உடையான் வைத்திய நாதன் திருச்சிற்றம்பலம் உடையான் என்பவர் இக்கோவிலுக்கு நில தானம் அளித்த செய்தியை தருகின்றது

அடுத்த கல்வெட்டு முதற்க்குலோத்துங்கனின் 37வது ஆட்சியாண்டை சேர்ந்தது இதில் இக்கோவில் இம்மன்னனின் ஆணைப்படி சந்திர சேகரன் இரவி எனும் சோழேந்திர சிங்க ஆசாரி எனும் நபர் இக்கோவிலை கட்டியச்செய்தி காணப்படுகின்றது

"பெருமாள் (முதலாம் குலோத்துங்க சோழன்) திருவாய் மொழிந்தருளி இத்திருக்கற்றளி எடுப்பித்த சந்திர சேகரன் இரவி சோழேந்திர சிங்க ஆசாரி" என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது

மேலும் இக்கல்வெட்டில் இக்கோவில் செயம் கொண்ட சோழமண்டலத்தில் மணவிற் கோட்டதின் புரிசை நாட்டு பிரிவின் கீழ் வருகின்றது

இக்கோவிலில் விளக்கெரிக்க செயம்கொண்ட சோழமண்டலதிலுள்ள எயிற்க்கோட்டத்தை சேர்நத கோநேரி நாட்டு அரசூர் கிழவன் வேளாள மதுராந்தகன் என்பவர் சாவாமூவாப் பேராடு தொன்னுற்று ஐந்து தானமாய் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் நெய்யை அளப்பதாய் பங்கி புஞ்சையன் எனும் இடையர் குலத்தை சேர்ந்த நபர் உறுதியளிக்கின்றான்

இக்கோவிலில் இரண்டாம் குலோத்துங்கனின் 12 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்றும்

இரண்டாம் இராசாதிராசனின் 11ம் ஆண்டு கல்வெட்டும் கிடைக்கின்றது

இவ்விரண்டும் இவ்வூரைசேர்ந்த அருளாப்பட்டன் மகள் ஆண்டமை சானி என்பவள் தானம் கொடுத்த செய்தியை குறிக்கின்றது

இப்பெண் மருத்துவர் எனும் இனத்தை சார்ந்தவர் என்பது முனைவர்.திரு.இராமச்சந்திரன் அவர்களின் கருத்து

இக்கோவில் தேவக்கோட்ட சிற்பங்கள் பேரழகு மிக்கவை

மேலும் பூதவரியில் பஞ்சதந்திர கதைகளும்,குறும்புமிக்க பூதங்களின் சிற்பங்களும் அழகுடன் பொறிக்கப்பட்டுள்ளன

ஆமையை தூக்கி செல்லும் கொக்குகள்..

குரங்கை சுமந்துச் செல்லும் முதலை...

வரலாற்று ஆர்வம் மிக்கவர்களும்

சிற்பக்கலையில் ஆர்வம் மிக்கவர்களும் காணவேண்டிய திருக்கோவில்

இடையார்பாக்கத்து மகாதேவர் கோவில்

கல்வெட்டு தகவல்கள்: தமிழ்நாட்டு கல்வெட்டுகள் தொகுதி - 4

Comments

Popular posts from this blog

பட்டினப்பாலை காட்டும் தமிழரின் வணிகம்

கற்றல் நன்றே

சோழபுரம்- தமிழகத்தின் முதல் பள்ளிப்படை